Follow Us:

Saturday, Apr 19
ஏப்ரல் 18, 2025

ஜனாதிபதியின் பங்கேற்புடன் “சிறி தலதா வழிபாடு” ஆரம்பம்

இந்த நாட்டிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புனித தந்த தாதுவை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” இன்று (18) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பித்தது.

அதன் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், முதலில் ஜனாதிபதி “தலதா” புனித தந்த தாதுவை தரிசித்து மலர் வைத்து வழிபட்டார். அதன் பின்னர் பக்தர்களுக்கு புனித தந்த தாதுவை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் “சிறி தலதா வழிபாடு” ஆரம்பித்தது.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான இன்று (18) புனித தந்த தாதுவை வழிபட நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். இன்று மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் ஏனைய அமைச்சர்கள், வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top