Follow Us:

Monday, Jan 27
டிசம்பர் 5, 2024

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் ஒழுங்கான முறைமை பின்பற்றப்பட வேண்டும்

– ஜனாதிபதி

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மதுவரி வசூலிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அறவிடப்படவேண்டிய வரியை வசூல் செய்தல், கருப்புப் பட்டியிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வரி வசூலிக்க முடியாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்தல் போன்ற புதிய முறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், வரி அறவீடு செய்வதில் தற்போதுள்ள சட்டதிட்டங்களில் காணப்படும் குறைபாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மதுவரி உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேவேளை, உற்பத்தி மற்றும் பொதியிடல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளினால் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு , செயற்கைக் கள்ளு பாவனையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் ரோஹன சேனாரத்ன, பிரதி மதுவரி ஆணையாளர் ஆர். வி. எஸ். திஸ்ஸ குமார, உதவி மதுவரி ஆணையாளர் எம். ஜே. டி சில்வா, பிரதம நிதி அதிகாரி ஜி. ஏ. சாந்தனி, பிரதம கணக்காளர் டபிள்யூ. ஆர். பரணகம உள்ளிட்ட மதுவரித் திணைக்கள உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

Top