Presidential Secretariat of Sri Lanka

கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில்

கலைத்துறையின் மேம்பாட்டிற்காக உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிப்பதற்கான கலாபூஷணம் அரச விருது வழங்கல் விழா 2022 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சினால் 38 ஆவது தடவையாக இந்த விருது வழங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நாட்டின் கலைஞர் ஒருவருக்கு கிடைக்கும் உயரிய விருதான கலாபூஷணம் இம்முறை நாடளாவிய ரீதியிலுள்ள 200 கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த ஆரம்ப விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்களுக்கு கலாபூஷணம் நாமம், விருது, சான்றிதழ் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

இதன்போது கலாசார அலுவல்கள் பணிப்பாளர் யசிந்த குணவர்தனவினால் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்வின் ஆரம்பத்தில் ஜெக்சன் அன்டனி உள்ளிட்ட உயிர்நீத்த கலைஞர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வண. ரம்புக்கன சித்தார்த்த தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜீர அபேவர்தன, சீ.பி.ரத்நாயக்க, பேராசிரியர் திஸ்ஸ விதாரன உள்ளிட்டவர்களுடன்,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன, பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்க, மற்றும் விருத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular