Presidential Secretariat of Sri Lanka

2024 ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடையும் வாய்ப்பு உள்ளது – அமைச்சர் நளின் பெர்ணான்டோ

இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் பொருளாதார சுருக்கத்தைக் குறைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளதன் படி, 2024 ஆம் ஆண்டு 1.8% அல்லது 1.9% வரையிலான சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நளின் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலின் பெர்ணான்டோ,

நாம் தற்போது, சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடர்பில் எதிர்பார்த்துள்ளதுடன் அது குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டும் வருகின்றோம். குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கிய இலக்குகள் தொடர்பிலான மதிப்பீடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

நாம் இந்த விடயம் தொடர்பில் மிகச்சரியான தீர்மானங்களை எடுத்துள்ளதுடன் இதற்காக முறையான தலைமைத்துவத்தையும் வழங்கியுள்ளோம். ஒரு சில விடயங்கள் தொடர்பில் கால தாமதங்கள் ஏற்பட்டாலும் கூட, குறிப்பாக அரச வருமானம் ஈட்டல் குறித்து பல்வேறு சிக்கல்கள் தோன்றினாலும் நாம் அரசாங்கம் என்ற வகையில் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதோடு, பல்வேறு கொள்கை ரீதியிலான தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.

இதுபோன்ற செயற்பாடுகளால்தான் கடந்த வருடம் இருந்த நிலையை விட தற்போது இந்நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்றுவருகின்றது. 94% சதவீதமாக இருந்த உணவுப் பற்றாக்குறை (Food inflation) தற்போது -5.1 வரை குறைக்க எம்மால் முடிந்துள்ளது. மேலும், 30% – 32% ஆக உயர்ந்த வங்கி வட்டி வீதத்தை, 15% – 16% வரை குறைக்க முடிந்துள்ளது.

இதனால் இந்நாட்டிள் உள்ள தொழில் முயற்சியாளர்களும், வர்த்தகர்களுக்கும் எதிர்கொண்ட பாரிய அழுத்தம் தற்போது நீங்கியுள்ளது. இதன்மூலம் மீண்டும் இந்நாட்டின் பொருளாதாரம் செயற்திறன்மிக்க வகையில் செயற்பட ஆரம்பித்துள்ளது.

அதேபோன்று, எமக்கு இருந்த பாரிய சிக்கல்தான் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை. இதனால் சர்வதேச ரீதியில் நாம் மேற்கொண்டிருந்த வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் கேள்விக்குறியானது மாத்திரமன்றி உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டனர். நாம் உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டுமன்றி ஏற்றுமதிக்காகவும் உற்பத்திகளை மேற்கொள்கின்றோம்.

ஏற்றுமதிப் பொருட்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், ஏற்றுமதி வருமானமும் வீழ்ச்சியடையும். இதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. தற்போது வாகன இறக்குமதி தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை கட்டம் கட்டமாக நீக்கி வருகிறோம். வாகன இறக்குமதி தொடர்பிலும் பொதுப்போக்குவரத்து மற்றும் தொழிற்துறைக்கு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளோம்.

மேலும் எதிர்வரும் வருடம் சாதகமான பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் பொருளாதார சுருக்கத்தைக் குறைப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு எமக்கு 1.8% அல்லது 1.9% வரையிலான சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைய முடியும் என்று எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு உட்பட ஏனைய பொருளாதார சுமைகளையும் குறைக்க முடியும்.

அதேபோன்று, பாரிய அளவில் அதிகரித்த பணவீக்கத்தை இவ்வளவு விரைவாக குறைக்க முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் எடுத்த கொள்கை ரீதியிலான பல்வேறு தீர்மானங்களால் இந்நாட்டின் பொருளாதாரம் மீட்சி அடைந்ததுடன் பணவீக்கத்தை தனி இலக்கத்துக்கு கொண்டு வரவும் முடிந்துள்ளது.” என்றும் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

(English) Recent News

Most popular