Presidential Secretariat of Sri Lanka

புதிய கல்வி மறுசீரமைப்புகளில் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் – பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயக் கல்வியை, புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்குவதற்கு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாகவும் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த உபுல் மஹேந்திர ராஜபக்ஷ,

முப்பது வருடகால யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்நாட்டில் இனங்களுக்கு இடையில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் அந்த முயற்சிகள் வீழ்ச்சி அடைந்ததாக உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கம் உள்ளிட்ட அனைவரும் இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து இனமக்களுக்கும் இடையிலும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன்படி, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே கடந்த முறை தேசிய வெசாக் கொண்டாட்டத்தை அனைத்து இன மக்களும் வாழக்கூடிய புத்தளம் பிரதேசத்தில் நடத்த நடவடிக்கை எடுத்ததாகவும் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நாட்டில் மதங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின் பெரியோர்களுக்கு மத்தியில் புரிதலை ஏற்படுத்துவது அவசியமாக இருந்தாலும், இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்களுக்கு அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழ்வது குறித்து தெளிவூட்டுவதே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை இந்நாட்டில் ஏற்படுத்த மிகப்பொருத்தமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் இதன்போது மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறிப்பிட்டதொரு பிரதேசத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல் நாடு பூராகவும், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாகவும் சகவாழ்வு குறித்து மக்களைத் தெளிவூட்டுவது அவசியம் என்று குறிப்பிட்ட உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, அதற்கு அனைத்து மதத்தலைவர்களையும் இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமய கல்வியின் தரத்தை மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கல்வி முறையில் சமயக் கல்வியை (அறநெறிப் பாடசாலைகள்) இணைத்து, அதற்கேற்ப முன்னுரிமைப் புள்ளி முறையை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளதுடன், துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த எதிர்பார்க்கப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இந்நாட்டில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்றும் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

(English) Recent News

Most popular