Presidential Secretariat of Sri Lanka

சவால்களை முறியடிக்கக் கூடிய மனப்பான்மை மாற்றத்துடனான கல்வி முறையொன்றே நாட்டுக்கு அவசியம்

  • ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட சாகல ரத்நாயக்க தெரிவிப்பு.

ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று (18) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த அவர் முதலில் பல்கலைக்கழக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு ஆய்வு கூடத்தை (Analytical Laboratory) திறந்துவைத்த சாகல ரத்னாயக்க, பல்கலைக்கழக மைதானத்தில் கட்டப்பட்டு வரும் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.

அதன் பின்னர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இணைந்து கொண்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உயர் தரத்தையும் உயர் கல்வித் தரத்தையும் பேணி வருவதற்கு சாகல ரத்நாயக்க வாழ்த்துத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சாகல ரத்னாயக்க,

“நீங்கள் பேணி வரும் தரநிலைகள், கல்வியின் தரம் மற்றும் நீங்கள் வழங்கும் முழுமையான கல்வி அனுபவம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எனது மருமகன் இங்கு சட்டம் மற்றும் குற்றவியல் பீடத்தில் பயின்றார். அவர் இந்த நிறுவனத்தை தெரிவு செய்ததற்குப் பிரதான காரணம் இங்கு கடைபிடிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு தான். அவர் வேறு பல்கலைக்கழகத்திற்குச் செல்ல விரும்பவில்லை, பல்வேறு காரணங்களுக்காக வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதை அவர் விரும்பவில்லை.

எமது நாட்டை முன்னேற்றுவதற்கு இது போன்ற கல்விமுறைதான் அவசியமானது. உண்மையிலே இந்த நாட்டிற்கு, இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ளும் வகையில் மனப்பான்மை மாற்றம் உருவாக்கப்பட வேண்டும்.

நாம் வெவ்வேறு சமயங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த போதும் நாம் தற்போது சரியான பாதையில் பயணிப்பதாக நினைக்கிறேன். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து சென்றால், நாம் கனவு கண்ட சிங்கப்பூரைப் போன்று இலங்கையையும் சிறந்த நிலைக்கு உயர்த்தலாம்.

சட்டம் இயற்றப்பட வேண்டிய சமயத்தில் சட்டம் இயற்றுவதும், ஒழுங்குபடுத்த வேண்டிய இடங்களை ஒழுங்குபடுத்துவதும், மேற்பார்வையில் இருந்து நீக்க வேண்டியவற்றை நீக்குவதும் இங்கு முக்கியமானது.

எனவே பொருளாதாரத்தில் உள்ள தேவையற்ற கண்காணிப்புகளை நீக்கி, திறந்து விட வேண்டும். அத்தோடு தற்போதுள்ள சட்டங்கள், சட்டவிரோத பணப்பரிமாற்ற கண்காணிப்பு , நிதி விசாரணைகள் போன்றவற்றின் தரத்தை மீள உறுதி செய்ய வேண்டும்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்க விசேட பங்கு இருக்கிறது. நமது இளைஞர், யுவதிகளுக்காக புதிய கல்வி முறைகளை உருவாக்கப்பட்டு வருகின்றன. துறைமுக நகரம் மற்றும் நிதி மையம் நிறுவப்பட்டதும், எமது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நமது முறைமைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். நிதிச் சந்தைகளும் அதற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக தரமான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டியது மிகவும் பயனுள்ளதாக அமையும்.தேவையான அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் முழுமையான வளர்ச்சித் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். ஆனால் அதனை கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார நெருக்கடியில் இதையெல்லாம் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

நாம் முன்னோக்கிச் செல்லும்போது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். நாம் அதைச் சரியாகச் செய்து வருகிறோம்.நமக்குத் தேவையான அறிவைப் பெற்று, உள்ள அறிவைக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். குறிப்பாக கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இங்கு முன்னோடியாக இருக்க வேண்டும்.

இங்கு கல்வி கற்ற மாணவர் ஒருவர் அரச தொழில் பெறுவதற்காக எம்.பிகளின் பின்னால் செல்லும் நிலை காணப்படுமாக இருந்தால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தோல்வியடைந்து விட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த முறைமையை நாம் மாற்ற வேண்டும். அரச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய பட்டதாரிகள் ஒவ்வொருவரும் அரச தொழில் கிடைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். மாணவர் தொகையை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்படுகிறது. அதன் கிளைகளை குருணாகல், பொலன்னறுவை மற்றும் கொழும்பில் ஆரம்பிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளோம்.இது தொடர்பில் உங்களுக்கு வேறு முன்மொழிவுகள் இருந்தால் செவ்வாய் கிழமைக்கு முன்னர் அதனைச் சமர்ப்பிக்க முடியும்”என்று சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.எச்.எஸ். கோட்டேகொட , உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பிரதி உப வேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் டி.சி.ஏ.விக்ரமசிங்க, பிரதி உபவேந்தர் (கல்விசார்) பேராசிரியர் கே.ஏ.எஸ்.தம்மிக்க ஆகியோர் இந்த கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular