Presidential Secretariat of Sri Lanka

சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்!

சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து யுவான் ஜியாஜூன் தலைமையிலான சீனத் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, நாட்டிலுள்ள புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேற்படிச் செயற்பாடுகளுக்கான பிராந்திய ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்தார்.

அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கவுள்ளதோடு, தேசிய அபிவிருத்திக்கு அவற்றின் பங்களிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்பணிப்புக்கு பாராட்டு தெரிவித்த சீன தூதுக்குழுவினர், இலங்கையின் எதிர்கால அரசியல், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும் நம்பிக்கை தெரிவித்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் இக்கலந்துரையடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular