Presidential Secretariat of Sri Lanka

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை, பொருளாதார அபிவிருத்திக்காக, செயல்திறன்மிக்கவகையில் பயன்படுத்த விசேட வேலைத் திட்டம்!

  • இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க உத்தரவு.
  • சுற்றுலாப் பயணிகளை கவரும் 24 கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ.

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான இறுதி அறிவித்தல், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முதலீட்டாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை அரசாங்கம் மீளப்பொறுப்பேற்று, அத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ,

ஹில்டன் ஹோட்டல் தற்போது இலாபகரமான நிறுவனமாக உள்ளது. ஹில்டன் ஹோட்டல் மற்றும் அதன் சர்வதேச குழுமத்துடன் காணப்படும் இணக்கப்பாடுகள் பாதிக்காத வகையிலும் அதே நேரம் ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் அதனை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் புதிதாக அறைகளை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. பாரிய நிலப்பரப்பைக்கொண்ட இந்த ஹோட்டலை பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பயன்மிக்க முதலீட்டுத்திட்டமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில், முக்கியமாக கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் வணிக மதிப்புள்ள அரச காணிகள் உள்ளன. பொருளாதார ரீதியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் புதிய முதலீட்டாளர்களுக்கு அவற்றை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நகர அபிவிருத்தி தொடர்பில் நாட்டுக்கு சாதகமான பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் திருகோணமலை, எல்ல, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட நகரங்களை சுற்றுலா பயணிகளை மேலும் கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பங்களிப்புடன், அப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது தடைப்பட்டுள்ள கொழும்பு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அரச – தனியார் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக முன்னெடுக்க தனியார் முதலீட்டாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அவசியமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்நாட்டில் உள்ள 24 கடற்கரைப் பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் அவற்றை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும், கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகளுடன் இணைந்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன்போது கரையோரப் பிரதேசங்களுக்கு சூழல்சார் பாதிப்புகள் ஏற்படாமல் அதனைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

(English) Recent News

Most popular