Presidential Secretariat of Sri Lanka

அரசாங்கக் கணக்குக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

  • நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவதில் பாராளுமன்றத்திற்கு முக்கிய பொறுப்பு காணப்படுகிறது-ஜனாதிபதி.
  • உயர் செயற்றிறனை வெளிப்படுத்திய 65 அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி தலைமையில் தங்க மற்றும் வௌ்ளி விருதுகள்.

அரசாங்கக் கணக்குக் குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிதிசார் செயற்பாடுகள் தொடர்பிலான அதிக குழுக்களை நியமித்துள்ள உலகில் ஒரே ஒரு பாராளுமன்றமான இலங்கை பாராளுமன்றத்திற்கு நிதி ஒழுக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய முதன்மைப் பொறுப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதிக் கட்டுப்பாடு மற்றும் அரச செலவீனங்கள் தொடர்பிலான அதிகாரங்களை கொண்டிருக்கும் பாராளுமன்றம் அவற்றை உரிய முறையில் செயற்படுத்த தவறியுள்ளமையே நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கு காரணம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (18) நடைப்பெற்ற அரசாங்கக் கணக்குக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், 2019- 2020 ஆம் ஆண்டுகளில் செயற்திறனை வெளிப்படுத்தியிருந்த 65 அரச நிறுவனங்களுக்கு தங்க மற்றும் வௌ்ளி விருதுகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயப்படுத்தல் என்பவற்றுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை பழமையான முறையின் கீழ் முன்னெடுக்க முடியாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஒரு நோக்கத்தின் கீழ் ஒரே திட்டமிடலுடனான பிரிவுகளாக ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரச செலவீனங்களை கட்டுப்படுத்தல், ஒவ்வொரு ரூபாவிற்கும் உச்ச பெறுமதியை பெற்றுக்கொடுத்தல் , வருமானத்தை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளின் வாயிலாக நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டியது அவசியம் என்றும், அதற்கான வலுவான நிர்வாகக் கட்டமைப்பொன்று நாட்டுக்கு அவசியப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்துக் கொள்வதற்காக வலயத்தின் பரந்த பொருளாதார கூட்டிணைவான RCEP இல் இணைவது மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

விவசாய நவீன மயமாக்கல் பணிகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயத்துறை தொடர்பிலான நிறுவனங்களில் ஒரு பகுதி, மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள நிலையில் மற்றும் சில நிறுவனங்கள் உள்ளூராட்சி சபைகளின் கீழ் காணப்படுகின்றமை அதன் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய நவீனமயமாக்கலின் போது அதுகுறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரச மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் பொதுக் கணக்கு வைப்பு முறைமைகள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் செயல் திறன் தொடர்பில் பாராளுமன்றத் தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசாங்க கணக்குக் குழுவின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் கனிணி வலையமைப்பின் கீழ் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு, கணக்காளர் நாயகத்தின் பரிசீலனை மற்றும் ஆராய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்கமைய, மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட 833 நிறுவனங்களில் 2019 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட 15 நிறுவனங்களுக்கு தங்க விருதுகளும் ஏனைய 30 நிறுவனங்களுக்கு வௌ்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. அதேபோல் 2020 ஆம் ஆண்டிலும் தெரிவு செய்யப்பட்ட 15 நிறுவனங்களுக்கு தங்க விருதுகளும் ஏனைய 30 நிறுவனங்களுக்கு வௌ்ளி விருதுகளும் வழங்கப்பட்டன.

அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், விஷேட நிதிப் பிரிவுகள், மாவட்ட செயலகங்கள்,மாகாண நிதியங்கள், மாகாண சபையின் கீழான நிறுவனங்கள், மாநகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த விருது வழங்கல் நிகழ்விற்கு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் காணப்படும் நிறுவனங்களும் பிரதேச சபைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டன.

இங்கு உரையாற்றிய அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன,

வெற்றி பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு 2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 98 சதவீதமான அரச நிறுவனங்கள் மேம்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் மக்கள் பணம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். 2048 இல் அபிவிருத்து அடைந்த நாடு என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்குக்கு அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரச நிதிக் கட்டுப்பாடு தொடர்பிலான பொறுப்பு அரசியலமைப்பின் ஊடாகவே பாராளுமன்றத்தின் மீது சாட்டப்பட்டுள்ளது. அந்த பணியை உரிய வகையில் முன்னெடுத்துவரும் அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ, எதிர்கட்சியின் பிரதம கொரடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பீ.சி விக்ரமரத்ன, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி அனுஷா ரோஹனதீர, பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் பெரேரா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular