Presidential Secretariat of Sri Lanka

ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்

  • ஊழல் ஒழிப்புச் சட்டத்தை ஒழிக்க முற்படுவோரை மக்கள் புறக்கணிப்பர் – இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் சரத் ஜயமான்ன.

முழு நாட்டினதும் எதிர்பார்ப்பாக காணப்படும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை எதிர்ப்போரை மக்கள் புறக்கணிப்பர் என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

அரசாங்க துறைக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு மூலோபாய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் புதிய சட்டத்தின் கீழ் அந்த செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் ‘101’ கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் செயற்பாடுகளை போராட்ட வடிவங்களாக மாற்றிக்கொள்ளாது அவற்றை ஒழித்துக்கட்டுவதற்கான விடயமாகவே ஊழல் ஒழிப்புக்கான புதிய சட்டம் கொண்டு வரப்படவிருப்பதாகவும் அதனால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குவின் பணிகள் முழுமையாக சுயாதீன தன்மை கொண்டதாக மாறும் எனவும் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் காரணமாக இலங்கை மாத்திரமின்றி முழு உலகமும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. எந்தவொரு நாட்டினதும் ஊழல் செயற்பாடுகள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும். அதனால் தமது நாடு அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தலைவர்களும் மக்களும் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளை மட்டுப்படுத்திகொள்ளவே எதிர்பார்ப்பர்.

அதற்காகவே 2004 ஆம் ஆண்டில் உலக நாடுகள் இணைந்து ஊழலுக்கு எதிரான கொள்கைகளை உருவாக்கின. தமது நாடு ஊழல் அற்ற நாடு என்ற பெருமிதத்தை பெற்றுக்கொள்ள விரும்பு எந்தவொரு நாடும் அந்த கொள்கையை பின்பற்றலாம். நமது நாடும் அந்த கொள்கைத் திட்டத்தில் 2004 ஆம் ஆண்டிலேயே கையொப்பம் இட்டிருந்தாலும் தற்போது வரையில் உள்நுழையாமல் இருப்பது வருதத்திற்குரியதாகும். அதனாலேயே எமது நாட்டின் அரச மற்றும் தனியார் துறைகளில் மோசடி செயற்பாடுகள் நிறைந்து காணப்படுவதாக மக்கள் நினைக்கின்றனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளை முற்றாக ஒழித்த நாடுகள் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்திக்கொண்டன என்பதை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூர், ஹொங்கொங், பூட்டான்,இந்தோநேசியா, மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை போன்றே ஸ்கெண்டினேவய நாடுகளும் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளை ஒழித்த நாடுகள் வரிசையில் முன்னணியில் நிற்கின்றன. அந்த நாடுகளின் மக்கள் மத்தியில் மேற்படி செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் வேறூன்றிக் காணப்படுகின்ற போதிலும் நமது நாட்டவர் மத்தியில் அவ்வாறான எண்ணங்கள் இல்லை. அதனால் கல்வித்துறையில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்ளும் அதேநேரம் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எமது நாட்டின் மிக முக்கியமான ஒரு அத்தியாயத்தையே நாம் இப்போது கடந்துச் செல்கிறோம். புதிய சட்டம் கொண்டுவரப்படும் பட்சத்தில் எமது அபிமானம் மேலோங்கும். இருப்பினும் சட்டம் கொண்டுவரப்படுவதால் மாத்திரம் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் முற்றாக ஒழிந்துவிடாது.

1954 கொண்டுவரப்பட்ட ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. அன்று முதல் 30 வருட காலப்பகுதியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையுடன் நாம் இணைந்துகொண்டு 20 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.

இதன் முக்கியமான விடயமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிரதானிகள் வார்த்தைக்கு அப்பால் சென்று சுயாதீனமாக செயற்பட வேண்டியது அவசியமாகும். சுயமாக தீர்மானம் மேற்கொண்டு சுயாதீனமாக செயற்படுவதற்குமான சூழல் அவர்களுக்கு உருவாக்கிக்கொடுக்கப்பட வேண்டும்.

1954 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எமது நாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணியானது கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சித்தியடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், லஞ்சம், ஊழல் போன்ற சிக்கலான குற்றங்களைச் வெளிப்படையாக கண்டறியக்கூய ஆற்றல் நுண்ணறிவு, கணிதம், பொறியியல், தடயவியல் தணிக்கை, கணக்குப் பதிவியல் போன்ற விடயப்பரப்புக்களில் நிபுணத்துவம் பெற்றவர்களிடத்திலேயே காணப்படுகின்றது. ஒரு சம்பவத்தின் மூல காரணத்தை மிகக் குறுகிய காலத்தில் அவர்களால் கண்டுபிடிக்க முடியும். இந்த பணியை செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கு பல மாதங்கள் அவசியப்படும்.

ஹொங்கொங், பூட்டான் போன்ற நாடுகளில் இந்த விசாரணைகள் பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்படுவதில்லை. பொறியாளர்கள், பட்டய கணக்காளர்கள் உள்ளிட்டவர்களினாலேயே நடத்தப்படுகிறது. இதற்காக நமது நாட்டில் அதிகாரிகள் ஆட்சேர்ப்பின் போது சிவில் சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையை பின்பற்றியே மேற்படி அதிகாரிகளும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த புதிய சட்டத்தினூடாக, ஆணைக்குழுவிற்கு அவசியமான நிபுணர்களை புலனாய்வாளர்களாக நியமிக்க அதிகாரம் உள்ளது. அவர்களின் சேவை திருப்தி அற்றதாக காணப்படும் பட்சத்தில் ஒப்பந்த காலம் நீடிக்கப்படுவதை தவிர்க்கலாம். இதன்படி, திறமையான புலனாய்வாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய மேற்படிச் சட்டத்தின் ஊடாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு நிதி அமைச்சுக்கோ அல்லது திறைசேரிக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கான பணம் பாராளுமன்றத்தின் மூலம் திறைசேரியில் இருந்து வழங்கப்படும். இந்தச் சட்டத்தினால் கடமை மோதல், தனியார் துறை, லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது போன்ற சிறப்புப் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வரலாற்றில் முதன் முறையாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இலத்திரனியல் முறைமையின் ஊடாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றை பழமையான சட்ட முறையின் கீழ் விசாரணை செய்து தண்டனையை பெற்றுக்கொடுவும் இடமளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் சட்டங்களை தயாரிக்க முடியாது. இதன் ஆணையாளர்களை அரசியலமைப்புச் சபையே தெரிவு செய்ய வேண்டும். இதுவரைக்காலமும் ஜனாதிபதியின் தனி தீர்மானத்தின் கீழ் ஆணைக்குழுவின் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இனிவரும் நாட்களில் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட ஆணையாளர் தொடர்பில் சபையுடன் ஆலோசித்த பின்பே ஜனாதிபதி தெரிவு செய்வார்.

அதனால் ஊழல் ஒழிப்பு என்ற சொற் பதத்திற்கு பொருத்தமான ஆணைக்குழுவொன்று விரைவில் உருவாகும். அதனை தடுக்க முயற்சிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பர். திருடர்களை பிடிக்கவில்லை. நாம் வந்திருந்தால் ஊழலை ஒழித்துகட்டியிருப்போம் என்ற போராட்டங்களின் கோசங்களின் மீது மாத்திரம் தங்கியிருக்காமல் மாற்றத்தை எடுப்படுத்த அரச தலைவர்களையும் அதிகாரிகளையும் வலியுறுத்த வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

அதேபோல் அரச நிறுவனங்களில் காணப்படும் ஊழல் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரம், கட்டளைகளை விதிக்ககூடிய அதிகாரங்களும் ஆணைக்குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அரச துறைக்குள் மோசடியை ஒழிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் பெரும் பலமாக அமைந்திருக்ககும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

(English) Recent News

Most popular