Presidential Secretariat of Sri Lanka

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நாட்டின் நீர் வழங்கல் துறையின் திட்டங்கள், கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் அது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து மாதாந்தம் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய சாகல ரத்நாயக்க, நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். எஸ். சமரதுங்க மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular