Presidential Secretariat of Sri Lanka

வாழ்த்துச் செய்தி

மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

மக்களை சிரமத்தில் இருந்து மீட்பதற்கு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் முன்வந்து அதற்கு தீர்வு காணும் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பண்டிகை பிரதிபலிக்கிறது.

அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாக நபி இப்ராஹிம், அவரது மகன் நபி இஸ்மாயில் மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோர் கருதப்படுகிறார்கள். பல நூற்றாண்டுகளாக, அவர்கள் செய்த தியாகங்களுக்கு நன்றியின் வெளிப்பாடாக முழு உலக மக்களாலும் போற்றப்படுகின்றனர்.

அண்மைக் காலங்களில் இலங்கை இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்தது. அந்தக் கஷ்டங்களைச் சமாளித்து நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் சாதகமான காரணங்களாக அமைந்தன. நீங்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்வதற்கும் கடந்த வரலாற்றுக்கால முக்கியமான தருணத்தை நினைவுபடுத்துவதற்கும் ஹஜ் பண்டிகை மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன்.

அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும், பங்கேற்பும் மிகவும் முக்கியமானது. பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன்.

பெரியவர்களாகிய நாம் அனுபவிக்கும் இன்னல்களை வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லாமல், அவர்களை நிலையான மகிழ்ச்சியுடன் கூடிய பூகோள சமூகத்தின் பெருமை மிக்க மக்களாக உயர்த்துவதன் முக்கியத்துவத்தை முதியோர், இளையோர் என அனைவருக்கும் இந்த அற்புதமான ஹஜ் பெருநாளில் நான் நினைவூட்டுகிறேன்.

எதிர்வரும் ஹஜ் பெருநாள் அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் உலகளாவிய முஸ்லிங்களுக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

(English) Recent News

Most popular