Presidential Secretariat of Sri Lanka

“பௌத்த ஆய்வுகளுக்கான சர்வதேச மையமாக” பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் மாற்றப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு

• பிரிவேனா கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்

•அரசாங்கத்தின் பங்களிப்புடன் 2023 வெசாக் கொண்டாட்டம்

– மல்வத்து அஸ்கிரி பீட மகாசங்கத்தினர் விடுத்த பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம்.

பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை “சர்வதேச பௌத்த கற்கை மையமாக” மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவேனா கல்வியின் தரத்தை உயர்த்துவது இன்றியமையாதது என மகாசங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட யோசனை நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை அரசாங்க தலையீட்டுடன் நடத்துமாறு மல்வத்து அஸ்கிரி மகாசங்க உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

பௌத்த பிக்குமார் மற்றும் விகாரைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு சாத்தியமான அனைத்து தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஒன்றரை வருடங்களில் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய, பொருளாதார நிலையை கட்டியெழுப்புவேன் எனவும்

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

2019 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருந்த அரசாங்கத்தின் வரி வருவாய் 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் காணப்பட்டது. எங்களது வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எமக்கு தெரிவித்துள்ளது. ஏனைய நாடுகள் தங்கள் மக்களிடம் இருந்து சம்பாதித்த வரிப்பணத்தை எங்களுக்கு கொடுப்பதாக இருந்தால் உங்கள் நாட்டின் வருமானத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கூறியது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் நாங்கள் முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை எட்ட முயற்சித்தோம். அதனால் அன்று மக்கள் எதிர்கொண்ட பல சிரமங்கள் இன்று தவிர்க்கப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும் அதற்காக நான் தலையீடும் செய்தேன்.

துரதிஷ்டவசமாக, மே மாதம் 9ஆம் திகதி நடந்த சம்பவத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முறிவடைந்தது. அதன் பின்னர், சஜித் பிரேமதாசவை பிரதமராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். மற்ற எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ கூட்டிய கலந்துரையாடல்களில் கூட ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மட்டுமே கலந்துகொண்டன. நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலை தொடர்பில் அறிந்திருந்ததாலே ஏனையவர்கள் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்கவில்லை, பிரதமர் பதவியையும் ஏற்கவில்லை.

ஆனால் கடைசி நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்ததால், மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் விடுத்த கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்.

அதன்படி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதன் பின்னர் நாம் அரசியல் செய்வோம். ஆனால் இந்த நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் தேவை. இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதத்திற்குள் மக்களுக்கு

நிவாரணம் வழங்கக்கூடிய பொருளாதாரத்தை தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த காலகட்டம் கடினமானதாக இருந்தாலும், அனைவரிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புடன் பொருளாதார ரீதியில் பலமான நாடாக மாறுவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்..

இங்கு உரையாற்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள வரிக் கொள்கையை வலுக்கட்டாயமாக அமுல்படுத்த முயல்வதாக எமக்கு தோன்றலாம்.. ஆனால் , சரியான நேரத்தில் செய்யப்படாது, தடைப்பட்டிருந்த அரச வருமான வழிகளை மீள சீரமைப்பதே உண்மையில் நடந்துள்ளது.

இதை ஒரேதடவையில் பெற்றதால் தான் இன்று மக்கள் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. கடந்த அரசாங்கங்கள் இந்த சரியான கொள்கைகளை பின்பற்றியிருந்தால் இன்று இந்த நிலைமையை நாம் சந்திக்க வேண்டியிருக்காது.

உண்மையில் இது இலங்கையில் பாரிய பொருளாதார அபிவிருத்தியை ஆரம்பிக்கும் வேலைத்திட்டமாகும். வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுத்துச் சென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது கடினமான காரியமல்ல என்றார்.

இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், வணக்கத்திற்குரிய மல்வத்து பீட அனுநாயக்க திம்புல்கும்புரே ஸ்ரீ சரங்கர விமலதம்ம தேரர், மல்வது பீட அனுநாயக்க கலாநிதி நியங்கொட விஜிதசிறி தேரர் , வணக்கத்துக்குரிய அஸ்கிரி பீட லேகனாதிகாரி மெதகம தம்மாநந்த தேரர், மல்வத்து பீட லேகனாதிகாரி வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட சங்கசபை தேரர்கள் மற்றும் புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(English) Recent News

Most popular