Presidential Secretariat of Sri Lanka

மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நெல் கொள்வனவு செய்ய மற்றும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப் பணிக்கொடை நிலுவைத் தொகையை வழங்குவதற்கு
போசாக்கின்மையை குறைப்பதற்கு
அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு- உடனடியாக நிதி வழங்க ஜனாதிபதி பணிப்புரை.
தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கவும் தேவையான நிதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், 2022 ஏப்ரல் மாதத்தில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பணிக்கொடையை கட்டம் கட்டமாக வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

போசாக்கின்மையை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு, உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கவும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் சமுர்த்தி நிவாரணம் என்பவற்றை தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்காக சுகாதார அமைச்சிற்கு தேவையான நிதியை துரிதமாக வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

(English) Recent News

Most popular