Presidential Secretariat of Sri Lanka

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு

இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராட்டினார்.

பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார்.இளைஞர்களின் ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் ஜனாதிபதியின் தொலைநோக்கை நனவாக்குவதற்கு இத்தொழிற்பயிற்சி நிலையம் வழிவகுக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரையன் எட்வர்ட் ஷீஹானுக்கும் (Brian Edward Sheehan) இடையில் இன்று (09) கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கவும், இளைஞர் மத்தியில் தீங்கு விளைவிக்கும் மதுபான பாவனையை குறைக்கவும் லயன்ஸ் கழகம் இளைஞர்களின் பங்களிப்புடன் நடத்தியுள்ள போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் லயன்ஸ் ஆய்வு நிகழ்ச்சித்திட்டம் (Lions Quest) ஆகியன குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் லயன்ஸ் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி வழங்கும் ஆதரவைப் பாராட்டிய சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரையன் எட்வர்ட் ஷீஹான், லியோ கழகத்திற்கு இலங்கையிலிருந்து 6,500 உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்காக டிசம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வுக்கு ஜனாதிபதி வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார்.

இளைஞர்களின் திறன்களை வெளிக்கொண்டுவர இந்நிகழ்வு பொருத்தமான வாய்ப்பாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் மகேந்திர அமரசூரியவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

கடந்த 33 வருடங்களாக லியோஸ் அண்ட் லயன்ஸ் கழகத்தில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதிக்கு, சர்வதேச லயன்ஸ் கிளப் தலைவர் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.

லயன் லோரி மேரி ஷீஹான் (Lori Marie Sheehan), லயன் மகேந்திர அமரசூரிய, லயன் மகேஷ் பெஸ்குவல், லயன் சுனில் வட்டவல, லயன் அனுர விக்ரமநாயக்க மற்றும் லயன் லசந்த குணவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

(English) Recent News

Most popular