Presidential Secretariat of Sri Lanka

காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவர் பாராட்டு

COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான நா குயூங் வொனுக்கும் (Na Kyung-Won) இடையிலான சந்திப்பு நேற்று (07) பிற்பகல் நடைபெற்றது.

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த நா குயூங் வொன், நாட்டில் காபன் வெளியேற்ற வீதம் ஏற்கனவே குறைவாக இருக்கின்றபோதிலும் அதன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கு திறன் மேம்பாடு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவ வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, காலநிலை மாற்றம் குறித்து அனைவரும் அறிவு பெறக்கூடிய உயர்கல்வி நிறுவனமாக இது இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் தாம் பொதுநலவாய செயலகம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் ஒப்புதலையும் பெற்று இதனை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

(English) Recent News

Most popular