Presidential Secretariat of Sri Lanka

நலன்புரி வசதிகளைப் பெறத் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் பூர்த்தி

“எவரையும் கைவிடாதீர்’’ என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் (28) நிறைவடைந்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளை எதிர்பார்த்து, இதுவரை 2.4 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள 70 சதவீதமானவர்களின் தரவுகள் தற்போது தரவுக் கட்டமைப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஏனைய 30 சதவீதமானோரின் தரவுகள் பிரதேச செயலகங்களிலுள்ள தரவுக் கட்டமைப்பில் பதிவேற்றப்படுகின்றன. மேலும் 1.5 மில்லியன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விண்ணப்பதாரரின் வீடுகளுக்குச் சென்று தரவுகள் உறுதிப்படுத்தப்படவுள்ளன. இந்தப் பணிகளை நவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

(English) Recent News

Most popular