Presidential Secretariat of Sri Lanka

இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (22) முற்பகல், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஆணைக்குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சுங்கம் தொடர்பாக முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக 2021 பெப்ரவரி 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆறு பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.எம்.எம்.சிறிவர்தன (தற்போதைய நிதிச் செயலாளர்), சிரேஷ்ட ஆலோசகர் (வர்த்தகம்) கலாநிதி சனத் ஜயநெத்தி மற்றும் இலங்கை சுங்கத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் பி.ஏ. டயஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன அவர்களின் தலைமையிலான ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

சுங்க அதிகாரிகள், சுங்க தொழிற்சங்கங்கள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், சேவை பெறுநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆணைக்குழு சுமார் ஒரு வருட காலமாக தகவல்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் 117 பரிந்துரைகள் மற்றும் 530 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையைத் தயாரித்துள்ளது.

பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இலங்கை சுங்கம் நிறுவன ரீதியான, நிர்வாக மற்றும் செயற்பாடுகளை எவ்வாறு திறம்பட மற்றும் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என்பதற்கான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்பிரிய ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திசாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனெக்க ஹேரத், ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மகேஷ் விதாரண ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular