Presidential Secretariat of Sri Lanka

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்தத் தீர்மானம்…

ஜனாதிபதியிடம் உப தலைவர் தெரிவிப்பு.

இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்றுறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குமென்று, அதன் உப தலைவர் சிக்ஷின் ஷென் (Shixin Chen) அவர்கள் தெரிவித்தார்.

இன்று (10) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து உரையாடும் போதே, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு தற்போது இந்நாட்டில் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் வெற்றிக்கு, சிக்ஷின் ஷென் அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அரச கூட்டுத்தாபனங்கள் பலவற்றை மறுசீரமைப்பதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்த்துள்ளது என்றும் சிக்ஷின் ஷென் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால், இலங்கைக்கு இவ்வாண்டில் 786 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வங்கியின் உதவியின் கீழ், இலங்கையில் தற்போது 27 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை, 68 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்குபற்றுதல்களுடன் இவ்வாண்டு மே 02 முதல் 05ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டிய வணிக மாநாடுகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் 5,000 பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
“கொவிட் – 19க்குப் பிந்தைய உலகின் காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் பசுமைப் பொருளாதாரம்” என்ற தொனிப்பொருளில், இம்முறை மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையானது, கொவிட் – 19 தொற்றுப் பரவலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகொண்டுள்ளமை, அரச சுகாதாரப் பொறிமுறையின் திறன் போன்றன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவரது பாராட்டுகளுக்குப் பாத்திரமாகின. தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்கு, அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும், ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட ஆலோசகர் எய்மிங் சோவ் (Aiming Zhou), வதிவிடப் பணிப்பாளர் ஷென் ஷென், செயலாளர் முஹம்மட் ஏஷான் கான் (Muhammad Eshan Khan), வதிவிடப் பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் (Utsav Kumar), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க, வெளி வளங்கள் துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி டீ.எஸ்.ஜயவீர ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular