Presidential Secretariat of Sri Lanka

கேஸ் சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல் மற்றும் வெடிப்புகள் பற்றிய விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இன்று (20) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பலகே அவர்களினால், இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் அண்மைக் காலமாகப் பதிவாகிவரும் கேஸ் (LPG) சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல்கள், வெடிப்புகள் மற்றும் அதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அவை தொடர்பில் எடுக்கக்கூடிய உடன் நடவடிக்கைகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி அவர்களினால் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதியன்று, இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இதன்படி, இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் லிட்ரோ மற்றும் லாஃப் எனும் இரு பிரதான எரிவாயு நிறுவனங்களுக்குச் சென்று நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் 11 நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், தீப்பற்றல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவான 17 இடங்கள், மின்னஞ்சல் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகே அவர்களின் தலைமைத்துவத்தில் அமைந்த இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டீ அல்விஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டீ.டபிள்யூ. ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, தொழில்நுட்பக் கல்லூரியின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் கலாநிதி சுதர்ஷன சோமசிறி மற்றும் இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாலிய ஜயசேகரவும், இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்.

கேஸ் சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல்கள் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும்போது, சம்பவங்களைக் கண்டறிதல் மற்றும் அனர்த்தத்துக்கு ஏதுவான இரு காரணங்கள் அடிப்படையில் இந்த முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென்று, குழுவின் தலைவர் ஷாந்த வல்பலகே தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு, குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும், இந்த அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டீ சில்வா ஆகியோரும், குழுவின் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular