Presidential Secretariat of Sri Lanka

பண்டாரவளை தாவரத் திசு வளர்ப்பு நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்…

ஊவா மாகாண விவசாயத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் பண்டாரவளை – பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள தாவரத் திசு வளர்ப்பு நிலையம் மற்றும் காளான் வித்து உற்பத்திப் பிரிவு ஆகியவற்றை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் (18) பார்வையிட்டார்.

வாழை, மா உள்ளிட்ட பழங்கள் மற்றும் மலர்ச் செடிகளின் திசு வளர்ப்பு, இந்த நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழக விவசாயப் பீடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான வசதிகளையும் இந்த நிலையம் வழங்குகின்றது.

இந்த இடத்தில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் மாகாண விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை ரீதியான அறிவை வழங்குவதற்குமான செயல் விளக்கப் பண்ணை ஒன்றும் நடத்தப்படுகிறது.

சேதனப் பசளையைப் பயன்படுத்துகின்ற மாதிரி பண்ணையைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு இடம்பெறும் சேதனப் பசளை உர உற்பத்தி உள்ளிட்ட சேவைகளை விரிவுபடுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனிபிட்டிய மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular