Presidential Secretariat of Sri Lanka

விசேட ஊடக வெளியீடு….

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்த பல விடயங்கள் குறித்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ பிரதமர் அவர்களினதும், சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவினால் கவனம் செலுத்தப்பட்டது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்தமை இவற்றில் முக்கிய காரணமாகும். தற்போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதுடன், அது மேலும் அதிகரிக்கக்கூடுமென சந்தை போக்குகளின் மூலம் தெரியவருகின்றது.

இலங்கையானது, எரிபொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணியைச் செலவிடும் ஒரு நாடு மட்டுமன்றி, அந்த இறக்குமதியிலேயே, நாட்டின் போக்குவரத்துச் சேவைகள், மின்சார உற்பத்தி என்பன தங்கியுள்ளன. இதன் மூலமே சில தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. 2019ஆம் ஆண்டில் மட்டும் எண்ணெய் இறக்குமதிக்காக 3,677 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி செலவிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியைத் தடை செய்தமை மற்றும் சர்வதேச எண்ணெய் விலைகள் 2019ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றுக்கு 68.80 அமெரிக்க டொலர்களிலிருந்து 2020ஆம் ஆண்டு 45.57 அமெரிக்க டொலர்கள் வரை குறைவடைந்ததன் காரணமாக 2020ஆம் ஆண்டில் இந்தச் செலவை 2,325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைத்துக்கொள்ள முடிந்தது. இருப்பினும், தற்போது நிலவும் விலை அதிகரிப்பு காரணமாக, 2021ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களையும் கடந்திருக்கும் சூழலில், வாகன இறக்குமதித் தடையைத் தொடர்ந்தும் பேணுகின்ற போதும் மசகு எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணி சுமார் 4,000 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருக்கின்றது. இந்தச் செலவு, மொத்த அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.

விதைகள், உரம், உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை இறக்குமதி செய்யும் இந்த இறக்குமதி சார்ந்த நுகர்வு முறைமை, உற்பத்தி சார்ந்த நுகர்வு முறைமைக்கு மாற்றப்பட வேண்டும்.
அந்நியச் செலாவணியை செலவிடுவதற்கு மேலதிகமாக, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு வருடமும் இலங்கை வங்கியிலும் மக்கள் வங்கியிலும் கடனில் தங்கியிருக்கும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த இரண்டு வங்கிகளுக்கும், சுமார் 652 பில்லியன் ரூபாய் கடனைத் தற்போது செலுத்த வேண்டியுள்ளது. மேற்படி இரண்டு வங்கிகளுக்கும், இலங்கை மின்சார சபையும் சுமார் 85 பில்லியன் ரூபாய் கடனைச் செலுத்தவேண்டி இருப்பதால், இதற்காக அரச வங்கிகள் வழங்கியுள்ள கடன்களுக்கு திறைசேரியினால் பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்கடன்களுக்காக அதிக வட்டியும் செலுத்த வேண்டியுள்ளது.

தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 60 சதவீதமான எரிபொருள் பாவனை குறைக்கப்பட வேண்டும். எனவே, போக்குவரத்துக்காக மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவதுடன், புகையிரத சேவைகளை முடியுமானளவு மின்சாரத்தினால் இயங்கும் சேவைகளாக மாற்ற வேண்டும். எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டு, மின்சாரக் கார் பாவனை ஊக்குவிக்கப்பட்டு, முச்சக்கர வண்டிகளுக்கும் மின்சார என்ஜின்களை வழங்குவதன் மூலம், போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், நகரப் பிரதேசங்களின் வளி மாசடைவதுடன், மக்கள் மத்தியில் சுவாச நோய்களும் அதிகரித்து வரும் நிலையில், சூழல்நேய வலுச்சக்தி மூலங்களுக்கு விரைவாகச் செல்லவேண்டியது கட்டாயமாகியுள்ளது. களனிதிஸ்ஸ மின் நிலையத்தை எல்என்ஜி (LNG) மின் நிலையமாக மாற்றுவதன் மூலம், மின்சார சபையினால் எரிபொருளுக்காகச் செலவிடப்படும் அதிகப்படியான செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்ப, உரம், எரிபொருள், வன வளங்கள், திண்மக் கழிவுகள் போன்றன மக்கள் வாழ்வுக்கு உகந்த வகையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.

எனவே, விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களின் மீது தங்கியிருக்கும் நுகர்வு முறைமையை மாற்றுவதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பல முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் மின்சார உற்பத்திக்காக, சுமார் 30 சதவீதமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், அதனை தவிர்ப்பதற்கு மீள்பிறப்பாக்கச் சக்தி வலு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச கட்டிடங்களுக்கு, சூரிய சக்தி மின் உற்பத்தித் தொகுதிகளை வழங்குவதன் மூலம், மக்கள் மீது சுமத்தப்படும் அதிக விலை அழுத்தங்களைக் குறைப்பது மட்டுமன்றி, அந்த மின் அலகுகளை மின்சார சபைக்கு வழங்கி, வருமானம் ஈட்டவும் முடியும்.

எனவே, இந்த விலை அதிகரிப்பானது, சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே ஆகும். இது நாட்டின் வங்கி முறைமையை பலப்படுத்தி, குறைந்த வட்டி வீதத்தைப் பேணுவதற்கும் அந்நியச் செலாவணியை குறைத்து, செலாவணி வீதத்தைப் பலப்படுத்தவும், மக்களின் சுகாதார, நலன் பேணலைப் பாதுகாக்கவும், இறக்குமதியின் மீது தங்கி இருக்கும் நுகர்வுப் பொருளாதாரத்தை, தேசிய உற்பத்தியின் மீது தங்கியிருக்கும் முதலீட்டு நுகர்வுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

(English) Recent News

Most popular