Presidential Secretariat of Sri Lanka

சீதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்…

சீதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்தை இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பார்வையிட்டார்.

பிரன்டிக்ஸ் (Brandix) நிறுவனம் வழங்கிய கட்டிடம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிகிச்சை மத்திய நிலையம் 03 வாட்டுத் தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 1200 நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். நவீன தொழிநுட்ப கருவிகள் உட்பட தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளிகளின் உளநலத்தை பாதுகாக்கும் பல வசதிகளையும் இந்த நிலையம் கொண்டுள்ளது. இராணுவத்தினரும் இராணுவத்தின் சேவா வனிதா பிரிவும் இணைந்து 10 நாட்களில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ரணவிரு எபரல் தொழிற்சாலையின் அங்கவீனமுற்ற படையினர் 24 மணி நேரத்தில் இதற்கு தேவையான 2000 கட்டில் விரிப்புகளை தைத்துள்ளனர்.

நடைமுறையில் வீடுகளில் சிகிச்சையளிக்க முடியாத எனினும் பாரிய நோய் அறிகுறிகள் இல்லாத கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் வைத்தியசாலைகளில் உருவாக்கக்கூடிய இடநெருக்கடியை தவிர்ப்பதற்கும் வைத்திய பணிக்குழாமினருக்கு நோய்த் தொற்றுடையவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதற்கும் சந்தர்ப்பமளிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்றா நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவரும் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ சேவையை வழங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு சிகிச்சை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சும் இராணுவத்தின் மருத்துவ பிரிவும் இணைந்து மேற்கொள்கின்றன.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular