Presidential Secretariat of Sri Lanka

மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி..

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக அவர்கள் கருதும் சிவபெருமானின் ஆசீர்வாதம் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இந்து சமய பக்தர்களினால் அனுஷ்டிக்கப்படும் ஒரு மகத்தான நாளான மகா சிவராத்திரி தினத்தில், அவர்கள் கண் விழித்து பல்வேறு கலாச்சார பெறுமானங்களுடன் கூடிய செயல்களில் ஈடுபட்டு சிவபெருமானுக்கு பூஜை செய்கிறார்கள். இதன் மூலம் நித்திய ஆசீர்வாதங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி பக்தி சிரத்தையுடன் சிவ வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்று இந்து பக்தர்கள் நம்புகிறார்கள்.

பழங்காலத்திலிருந்தே இலங்கை வாழ் இந்துக்களின் இந்த அற்புதமான கலாச்சார விழா எமது சமூகத்திற்கு அளவிடற்கரிய பெறுமதியை சேர்த்துள்ளது. இந்த சமய நடைமுறைகள் பல்வகை கலை இலக்கிய அம்சங்களைப் போன்றே சிறந்த நடனப் பாரம்பரியத்திற்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது தளர்வு இருந்தாலும், கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மகா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.
மகா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

(English) Recent News

Most popular