Presidential Secretariat of Sri Lanka

தேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …

  • தேசத்தின் அமைதிக்காக உயிரைத் தியாகம் செய்த விமானப்படை வீரர்களுக்கு தேசத்தின் மரியாதை …
  • தாய்நாட்டின் பாதுகாப்பை தொடர்ச்சியாக பேணுவது விமானப்படை உள்ளிட்ட ஆயுதப் படைகளின் பொறுப்பு …

விருதுகளை வழங்கிவைத்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டுக்காக செய்த சிறந்த சேவையை பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப் பிரிவுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கி வைத்தார்.

ஏழு தசாப்தங்களாக தாய்நாட்டின் அமைதிக்காக உயிரை தியாகம் செய்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட விமானப்படை வீரர்களுக்கு தேசத்தின் மரியாதையை செலுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பை தொடர்ச்சியாக பேணுவது விமானப்படை உட்பட ஆயுதப்படைகளின் முதன்மைப் பொறுப்பு என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (05) முற்பகல் காட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வர்ண விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

‘சுரகிமு லகாம்பர’ என்ற கருப்பொருளின் கீழ் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படையின் 05 ஆம் இலக்க போர் படை மற்றும் இலங்கை விமானப்படையின் 06 ஆம் இலக்க போக்குவரத்து ஹெலிகப்டர் படைப்பிரிவுக்கு ஜனாதிபதி அவர்கள் வர்ணங்களை வழங்கினார்.

முப்படைகளின் தளபதியினால் படையினருக்கு வழங்கும் மிக உயர்ந்த கௌரவ விருது ஜனாதிபதி வர்ண விருதுகளாகும். இதனுடன் சேர்த்து இலங்கை விமானப்படைக்கு 13 ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மனிதநேயத்தின் மதிப்பை அங்கீகரிக்கும் உண்மையான சர்வதேச ஒத்துழைப்பு மூலம் எல்லைகளை கடந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். சிக்கலான உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை வெற்றிகொள்ள நன்கு தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவை அலங்கரிப்பதற்காக வருகை தந்திருக்கும்  வெளிநாட்டு விமானப்படை வீரர்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், நாடுகளுக்கிடையிலான நட்புறவு இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவதாகவும் அந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் கடுநாயக்க விமானப் படை முகாமின் சி -130 முகாமின் படைப்பிரிவு 02 மற்றும் படைப்பிரிவு 05 ஆகியவற்றை பார்வையிட்டார்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள் விமானிகளுடன் ஒரு குழு புகைப்படத்திற்கும் தோற்றினார்.

‘விமானப்படையின் 70 ஆண்டு ஆகாயப் பலம்’ என்ற தலைப்பில் ஏயார் கமாண்டர் சன்ன திசாநாயக்க எழுதிய புத்தகம் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

விமானப்படை பணிப்பாளர் சபையுடன் புகைப்படத்திற்கு தோற்றிய பின்னர், ஜனாதிபதி அவர்கள் இலங்கை விமானப்படை சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிவுசெய்தார்.

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் பணிக்குழாம் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண, பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, மற்றும் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதிகள், முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular