Presidential Secretariat of Sri Lanka

இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்தும் உதவும்: சீன தூதுக்குழு ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு

  • இலங்கையுடனான உறவுகளுக்கு சீன ஜனாதிபதி ஷீ முன்னுரிமை…
  • சர்வதேச மன்றங்களில் இலங்கைக்காக குரல்கொடுக்கப்படும்…
  • துறைமுக நகர திட்டம் விரைவில் நிறைவுசெய்யப்படும்…

சீனாவுக்கு சமமான அபிவிருத்தியை நாட்டில் ஏற்படுத்துவது தனது இலக்காகும் என ஜனாதிபதி தெரிவிப்பு

  • வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்திக்க உதவுங்கள்..

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளை வெற்றிபெறச் செய்வதற்கு தொடர்ச்சியாக உதவுவதாக தற்போது இலங்கைக்கு வருகைதந்துள்ள சீன மக்கள் குடியரசின் உயர் மட்ட தூதுக்குழுவின் தலைவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உறுதியளித்தார்.

சீனா இலங்கை இருதரப்பு உறவுகள் தற்போது மிகவும் திருப்தியான நிலையில் உள்ளது. இந்த நற்புறவை பேணுவதும், மேலும் மேம்படுத்துவதும் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின் அவர்களின் முன்னுரிமையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் இலங்கையின் சுயாதீனம், இறைமை, ஆற்புல ஒருமைப்பாட்டிற்காக சீனா குரல்கொடுக்கும் என்றும் சீன தூதுக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் மற்றும் சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் அலுவலக பணிப்பாளர் திரு. யங் ஜியேஷி தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக் குழு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.

நீண்ட காலமாக சீன வெளிவிவகார அமைச்சின் பல்வேறு பதவிகளை வகித்த யங் ஜியேஷி அவர்கள் 2001-2005 காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சீன தூதுவராகவும் 2007-2013 காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்தார். சீன ஆட்சி கட்டமைப்பில் அவர் உப பிரதமருக்கு நிகரானவர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது பெற்றுக்கொண்ட அமோக வெற்றி குறித்து சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களின் வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு தெரிவித்த யங் ஜீயேஷி அவர்கள், தான் 35 வருடங்களுக்கு முன்னர் ஒரு மொழி பெயர்ப்பாளராக சீன தூதுக்குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்தார். நான்கு நாடுகளை உள்ளடக்கிய தனது ஆசிய சுற்றுப் பயணத்தில் முதலாவது நாடு இலங்கையாகும் எனக் குறிப்பிட்டதுடன், சீன ஜனாதிபதி இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமையளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா – இலங்கை உறவுகளில் தற்போதைய நிலைமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்து உரையாடலை ஆரம்பித்த ஜனாதிபதி அவர்கள், சீனா ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் குறித்த வேறுபாடின்றி இலங்கைக்கு உதவும் நீண்ட கால நண்பர் எனத் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சீனா பெரும் ஒத்துழைப்பை வழங்கியது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இருதரப்பு உறவுகள் மேலும் மேம்பட்டது. நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பை ஜனாதிபதி அவர்கள் விசேடமாக நினைவுகூர்ந்தார்.

பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றுக்கு சீன பங்களிப்பு செய்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், துறைமுக நகர திட்டம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அவற்றில் சிலவாகும். ஹம்பாந்தோட்டையில் துறைமுகமொன்றை நிர்மாணிப்பது சீனாவுடையதன்றி இலங்கையின் எண்ணமாகும். அது அதிக வருமானத்தையும் தொழில்வாய்ப்புகளையும் கொண்டுவரும் சிறந்த திட்டம் என்பதை நாம் விளங்கியிருந்தோம். அதற்கு நிதி உதவியளிக்க சீனா முன்வந்தது. பெரும்பாலான புவி அரசியல் பகுப்பாய்வுகள் இத்திட்டத்தை இலங்கையில் சீனா ஏற்படுத்தியிருக்கும் கடன் வலை என்றே அர்த்தப்படுத்தப்படுகின்றது. அது அவ்வாறல்ல என்றும், இந்த பாரிய திட்டம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. எனவே அதற்காக எமக்கு உதவுங்கள்’ என்று ஜனாதிபதி அவர்கள் சீன தூதுக் குழுவிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னர் 13 முறை சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தான் சீனா அடைந்துள்ள அபிவிருத்தி முன்னேற்றங்களை நேரடியாக கண்டுகொண்டதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ‘ குறிப்பாக கிராமிய பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தியை நான் கண்டேன். இதற்கு நிகரான அபிவிருத்தியை எமது நாட்டிலும் குறிப்பாக கிராமங்களில் அதனை ஏற்படுத்துவது கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தனது இலக்காகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் துறைமுக நகர திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பது தனது எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சீனாவுடனான வர்த்தகத்தின் போது இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பாரியதாக இருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அதனை குறைப்பதற்கு இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யும் பொருட்களின் அளவை அதிகரிக்குமாறும் தூதுக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

‘இலங்கையின் தனியார் துறை வலுவான நிலையில் உள்ளது. அவர்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அதற்காக சீன சந்தைவாய்ப்புகளை திறந்துவிடுங்கள். இலங்கையில் முதலீடு செய்யுமாறு சீன வர்த்தகர்களை ஊக்குவியுங்கள். இலங்கையில் சுற்றுலாவுக்காக சீனர்களை ஊக்குவியுங்கள். இலங்கையின் தேயிலை ஏலத்தில் பங்குகொள்ள சீனாவுக்கு முடியுமானால் அது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் பலமாகும்’ என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உயர் தரத்தில் சித்தியடையும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு திறந்திருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்த இளைஞர் யுவதிகளுக்காக தொழிநுட்ப பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது சீனாவுக்கு இலங்கையில் முதலிட முடியுமான துறையாகும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு பேச்சில் மட்டுமன்றி செயலில் உதவுவதற்கு சீனா தயாராக உள்ளது என்று யங் ஜியேஷி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையுடன் பல்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பொருத்தமான பல துறைகளை சீனா இனம்கண்டுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய திட்டங்களை நிறைவுசெய்வதற்கு மேலதிகமாக விவசாயம், கல்வி, சுற்றுலா, நீர் வழங்கள், சுகாதாரம், மருத்துவ வழங்கள், நவீன தொழிநுற்பம், டிஜிடல் பொருளாதாரம், நீல பொருளாதாரம் மற்றும் தொழில் பயிற்சி என்பன அவற்றில் சிலவாகும். சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த கலந்துரையாடலை மீண்டும் ஆரம்பிக்கவும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகர திட்டத்தை விரைவாக நிறைவுசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீன தூதுக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

கோவிட் 19 நோய்த்தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் யங் ஜீயேஷி அவர்கள் தெரிவித்தார்.

சீன சர்வதேச ஒத்துழைப்பு அபிவிருத்தி பணிப்பாளர் வேங் ஷியாஓ தாவோ, சீன வெளிவிவகார அமைச்சின் உதவி அமைச்சர் டெங் லி, கொழும்பு சீன தூதரக அலுவலகத்தின் தலைவர் ஹு வெய், சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய அலுவல்கள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் செங் சொங், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular