Presidential Secretariat of Sri Lanka

சுதேச கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு ஆக்கத்திறன் வாய்ந்த வகையில் திட்டமிடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு…

சட்டதிட்டங்களுக்குள் முடங்கி பாரம்பரிய கைத்தொழில்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் குறித்த கரிசனையற்ற சட்டங்களை ஆக்குவதன் மூலம் கைத்தொழில் துறையும் சுதேச கைத்தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் வீழ்ச்சிடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தவறு செய்யும் சிறு பிரிவினர் காரணமாக சட்ட ரீதியாக கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிப்படைவதற்கு இடமளிக்கக்கூடாதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பிரம்பு, பித்தளை, மட்பாண்டம், மரப்பாண்டம் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டம் தொடர்பாக நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

சுதேச கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்கு அதிகாரிகள் ஆக்கத்திறன் வாய்ந்த வகையில் செயற்படுவது அவசியமாகும். அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கீழ் மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது பற்றி ஆராய்ந்து பார்ப்பதும் அவசியமாகும். நீண்டகாலமாக உரிய கவனம் செலுத்தப்படாதிருக்கும் பாரம்பரிய கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வது திட்டமிட்ட வகையில் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஒவ்வொரு துறை தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தி இராஜாங்க அமைச்சு கட்டமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது இதன் காரணத்தினாலேயே ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அரச அனுசரணை கிடைக்காத காரணத்தினால் பாரம்பரிய கைத்தொழிலாளர்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில் தான் நாடு பூராகவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் அதனை தெளிவாக கண்டுகொண்டதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பிரம்பு, பித்தளை, மட்பாண்டம் மற்றும் மரப்பாண்ட துறை உள்ளிட்ட கிராமிய கைத்தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரச்சினைகளை தீர்த்து கைத்தொழிலை மேம்படுத்துவற்கு குறுகியகால மற்றும் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றை தொடர்ச்சியாக மீளாய்வுசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். களிமண்னை கொண்டு செல்லுதல் மற்றும் களிமண்னை பெற்றுக்கொள்வதில் கைத்தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை கண்டறியவும் தற்போது மூடப்பட்டுள்ள களிமண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களை மீள திறக்கவும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பாரம்பரிய கைத்தொழில்களின் முக்கியத்துவம் பற்றி பாடசாலை பருவத்திலிருந்து பிள்ளைகளுக்கு தெளிவுகள் வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கும் பாரம்பரிய கைத்தொழில் பொருத்தமான தலைப்பாகும். அதனூடாக இக்கைத்தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

சுதேச கைத்தொழில் துறையை மேம்படுத்துவதில் மாகாண அமைச்சுகள், நிரல் அமைச்சுக்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இத்துறைக்கு இளைஞர் தலைமுறையை ஈர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், பாரம்பரிய கைத்தொழிலாளர்களுக்கு தொழில்சார் பெறுமானத்தை வழங்குவது இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சுகளின் பொறுப்பாகுமென்றும் தெரிவித்தார்.

விவசாய பெறுமதியற்ற தரிசு நிலங்கள் பிரம்புகள் போன்ற கைத்தொழில் துறைக்கு தேவையானவற்றை பயிரிடுவதற்காக பயன்படுத்த முடியும். ஊதுபத்திகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூங்கில் குச்சிகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் அதிக பணம் செலவிடப்படுகின்றது. அவற்றை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிதியை மீதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

கைத்தொழில் துறை அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளர் டப்ளியு.ஏ.சூலானந்த பெரேரா, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் உபசேன திசாநாயக்க, தேசிய அருங்கலைகள் பேரவையின்  தலைவர் சுதத் அபேசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular