Presidential Secretariat of Sri Lanka

விவசாயத்தை கைவிட்டவர்களை ஈர்க்கும் வகையில் விவசாயப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்

–  ஜனாதிபதி மொனராகலையில் தெரிவிப்பு…

 இளைஞர் தலைமுறை விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு செல்வதை நிறுத்தி, விவசாயத்துறைக்கு அவர்களை ஈர்க்கும் வகையில் விவசாயப் பொருளாதாரம் ஒன்று மொனராகலை மாவட்டத்தில் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

சிறிய நிலப்பரப்பில் குறைந்த உற்பத்திச் செலவுடன் உயர் தொழிநுட்ப முறையை பயன்படுத்தி அதிக தரம் வாய்ந்த, கூடுதலான அறுவடையைப் பெறக்கூடிய விவசாயப் பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவது தனது கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (31) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மொனராகலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களின் மொனராகலை மாவட்ட சுற்றுப் பயணம் தனமல்வில தேசிய பாடசாலை விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பமானது.

பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, அபேட்சகர் சஷிந்திர ராஜபக்ஷ, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக அரச தலைவர் ஒருவர் வருகை தந்ததைப் பாராட்டி மாணவி சுலோச்சனா சந்தீபனி சிறு உரையொன்றை ஆற்றினார்.

கட்டிடங்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட குறைபாடுகளை நிறைவேற்றித் தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள், இராணுவத் தளபதியிடம் தெரிவித்தார்.

அபேட்சகர் ஜகத் புஷ்பகுமார தனமல்வில பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

பாரிய பிரச்சினையாக உள்ள யானைகளின் அச்சுறத்தல், காணி உறுதிகள் கிடைக்காமை, பொல்கட்டுவெவ  கால்வாயை புனரமைக்க வேண்டியதன் தேவை குறித்து மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

பசு மாடுகளை கடத்திச் செல்லும் பிரச்சினை பற்றியும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அபேட்சகர் கயாஷான் நவனந்த வெல்லவாய எத்திலிவெவ தெலுள்ள போதிராஜராம விகாரைக்கு அருகில் உள்ள விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

செவனகல சீனித் தொழிற்சாலையின் களஞ்சிய வசதிகள் போதுமானதாக இல்லாமை, காணி உறுதிகள் கிடைக்காமை, கிரிந்தி ஓயவிற்கு அண்மித்த காணிகளின் பிரச்சினை எத்திலிவெவ மூன்றாம் நிலை பாடசாலையின் குறைபாடுகள், பிரதேச மின்வழங்கல் பிரச்சினைகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. மின்சார வழங்கல் சம்பந்தமான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார்.

(English) Recent News

Most popular