Presidential Secretariat of Sri Lanka

கெலிடோ கடற்கரை அபிவிருத்தி திட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்

களுத்துறை வடக்கு கெலிடோ கடற்கரை அபிவிருத்தி திட்டத்தை இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பார்வையிட்டார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிச் செல்லும் வழியில் ஜனாதிபதி அவர்கள் இந்த கடற்கரைக்கு வருகை தந்தார்.

2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் இப்பகுதியில் உள்ள மணல்மேடு மண்ணரிப்புக்கு உட்பட்டதன் காரணமாக களுத்துறை வடக்கு கடற்கரை பாதிக்கப்பட்டது. இதற்கு தீர்வாக ஆழ் கடலிலிருந்து மணலை பெற்று கடற்கரையை பாதுகாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டம் மூன்று கட்டங்களை கொண்டதாகும். முதலாவது கட்டத்தின் கீழ் 2 கிலோமீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலமும் கொண்ட செயற்கை கடற்கரை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக மூன்று இலட்சம் மீற்றர் கியுப் மணல் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது 500 மீற்றர் பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டத்தினை இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்குமென்று கடற்கரை அபிவிருத்தி தலைமை பொறியியலாளர் சுஜீவ ரணவக்க ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஒரு கிலோமீற்றர் நீளமான அங்குலானை கடற்கரை இரண்டாம் கட்டமாகவும் 500 மீற்றர் நீளமான கல்கிஸ்சை கடற்கரை மூன்றாவது கட்டமாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியளவில் இந்த மூன்று கட்டங்களினதும் பணிகளை நிறைவுசெய்ய முடியுமென சுஜீவ ரணவக்க தெரிவித்தார்.

களுத்துறையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், மொரட்டுவை பாணந்துறை அண்மித்த நாளாந்த நகர சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

நகரை அண்மித்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முறையாக இடம்பெறாமை குறித்து ஜனாதிபதி அவர்கள் அச்சந்தர்ப்பத்திலேயே உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்.

நாளாந்த சுத்திகரிப்பு சேவைகள் உரிய முறையில் நடைபெறாமை குறித்து உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளவும் கூடிய விரைவில் நகரின் துப்பரவு பணிகளை மேற்கொள்ளவும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

(English) Recent News

Most popular