Presidential Secretariat of Sri Lanka

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையமான “ஆயத்தி“ தேசிய மத்திய நிலையம்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது

அங்கவீனம் என்பது ஒரு தேசிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. ஐந்து சிறுவர்களில் ஒருவர் (20%) உடல் அல்லது உள குறைபாடுகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முற்கூட்டியே கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் அவர்களை சிறந்த முறையில் சமூகமயப்படுத்த முடியும். இதற்கு தீர்வொன்றை வழங்கும் வகையில் அரச துறைக்கும் தனியார் துறைக்குமிடையிலான உடன்பாட்டில் “ஆயத்தி” தேசிய மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்காக 55 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் இதற்கான காணியையும் மருத்துவ சேவைகளையும் வழங்க முன்வந்துள்ளது.

‘ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இதற்கான நிதியை வழங்குகின்றன. ரொஷான் விஜேராம குடும்பமும் இதற்கான நிதி பங்காளராகும். இலங்கை இராணுவத்தின் தொழிற் பங்களிப்பில் ஒரு வருட காலப் பகுதியல் இதன் நிர்மாணப் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவிப்புலன் சார்ந்த உபகரணங்கள் லொட்டரி கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து நாட்களும் இலவசமாக சிகிச்கைகள் வழங்கப்படுவதுடன், களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்து உயர் தகைமை வாய்ந்த விசேட நிபுணர்களினால் சேவைகள் வழங்கப்படுகின்றன. உடல் மற்றும் உள ரீதியான குறைபாடுகளுக்கான ஆரம்ப பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், பேச்சு மற்றும் மொழி சார்ந்த சிகிச்சைகள், செவிப்புலன் சார்ந்த சிகிச்சைகள் உள்ளிட்ட சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது புலன்கள் சார்ந்த விசேட அறை இந்த நிலையத்தில் உள்ளது. நவீன செவிப்புலன் சிகிச்சை பிரிவு, பயிற்சி நிலையம், ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இது கொண்டுள்ளது. சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதால் நெறிப்படுத்தல் பணிகளை நிலையாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை சேகரிக்கும் பணிகள் ஆயத்தி நிதியத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

சமஸ்கிருத மொழியில் “எதிர்பார்ப்பு” என்ற சொல்லிலிருந்து  பெறப்பட்டுள்ள இந்த ஆயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களை முழுமையான இயலுமை கொண்டவர்களாக மாற்றுவதற்கு உதவும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நீண்டகால பேண்தகு தேசிய நிகழ்ச்சித்திட்டமாகும்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து “ஆயத்தி சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை” திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதன் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டார். சிறுவர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு பங்களித்தவர்களுடன் குழு புகைப்படம் ஒன்றிலும் தோற்றினார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பியல் டி சில்வா, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம்.இ.சேமசிங்க, மருத்துவ பீட பீடாதிபதி மற்றும் இலங்கை “ஆயத்தி“ பொறுப்பு நிதியத்தின் தலைவர் பேராசிரியர் நிலந்தி டி சில்வா, “ஆயத்தி” பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர் ரொஷான் மகாநாம உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular