Presidential Secretariat of Sri Lanka

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் நிகழ்ச்சித்திட்டம்….

  • பட்டம் பெற்றுள்ள பாடத்துறைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளில் உடனடி நியமனங்கள்….
  •  தொழில் வாய்ப்புகளை பெறுவோருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகள்…

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச தொழில்களுக்கு நியமிப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பட்டதாரிகளுடன் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இதனை தெரிவித்தார்.

அரச, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்க்கும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளது. தொழில்வாய்ப்புகளை பெறுவோருக்கு தலைமைத்துவம் மற்றும் அரச சேவை பற்றிய முறையான பயிற்சியும் விளக்கமும் வழங்கப்படவுள்ளது. மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரச சேவையொன்றையும் அரச ஊழியர்களையும் உருவாக்குவதே தனது நோக்கமாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பயிற்றப்படாத ஊழியர்கள் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய பிரிவினராக உள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு பலமான அடிப்படையுடன் கைத்தொழில் துறை நாட்டில் கட்டியெழுப்பப்படவில்லை. நாட்டின் எதிர்கால பயணத்திற்கு உள்ள பெரும் பலம் மனிதவளமாகும். எனவே நாட்டின் கற்ற இளைஞர், யுவதிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, அவர்களை பொருளாதார அபிவிருத்திக்கு பங்காளர்களாக ஆக்குவது முக்கிய தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஒரு சிறு பிரிவினரால் ஏற்படும் தவறுகளின் காரணமாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. அன்றாடம் இடம்பெறும் தவறுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மக்க வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவையின் மூலம்  தமக்கு ஊதியம் வழங்கும் மக்களுக்கு நியாயமானதொரு சேவையை பெற்றுக்கொடுப்பது அரச ஊழியர்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவுபடுத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அனைத்து பிள்ளைகளையும் நாட்டின் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றும் கல்வி முறைமையொன்று திட்டமிடப்பட்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளின் தொழில்வாய்ப்புகளுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டிய தேவையுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற் சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட மூலோபாயத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும். இளைஞர், யுவதிகள் தொழிற் தேடிச் செல்வதற்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் இளைஞர், யுவதிகளை தேடிவரும் கல்வி முறைமையொன்றை விரைவாக ஏற்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களான ஷெகான் சேனசிங்க, ஜானகவக்கும்புர, கஞ்சன விஜேசேகர, கனக்க ஹேரத் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பிரேமரத்ன, டி.பி.ஜானக்க, தேனுக விதானகமகே, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular