நில்வலா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உப்புத் தடுப்பினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்படும் வரை, அப்பகுதியின் நீர்ப்பாசனப் பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு குறுகிய கால நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, உப்புத் தடுப்பு அமைக்கும் பணியின் போது அகற்றப்பட்ட ஆற்றின் அருகே உள்ள காணியில் குவிந்து கிடக்கும் மண், வெள்ளப்பெருக்கின் போது நீர் எளிதாக வெளியேறும் வகையில் அகற்றப்படுதல், உப்புத் தடுப்பின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள Sheet File தடையின் உயரத்தைக் குறைத்து, நீர் எளிதாக வழிந்தோட வழிசெய்தல், ஆற்றுப் படுகையில் நிரம்பி இருக்கும் மணலை அகற்றுதல், நீர்வழிகளைத் தடுக்கும் வகையில் இருக்கும் தடைகளை அகற்றி நீர் எளிதாக வெளியேறக் கூடிய வகையில் கிளை கால்வாய்களை சுத்தம் செய்தல், மேலும் நெல் வயல்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக நிர்மானிக்கப்பட்டுள்ள நீர் இறைக்கும் நிலையங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாத்தறை, ஹித்தெடிய, மத்திய வட்டச் சாலையில் வசிக்கும் கிராம மக்களின் கிளை வீதிகள், காணி மற்றும் வீடுகள் மழை காலத்தில் நீரால் நிரம்புவதற்கு காரணமான வடிகால் அமைப்பு பிரச்சினை தொடர்பாக எதிர்காலத்தில் நீண்டகால தீர்வைப் பெறும் எதிர்பார்ப்பில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மழை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு குறுகிய கால தீர்வுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஹித்தெட்டிய 1 ஆம் மைல்கல் தொடக்கம் தஹநாயக்க வீதி வழியாக வரும் நீர், வட்டச் சாலையின் வடிகால் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள பகுதியை அகற்றி, அந்த இடத்திலிருந்து நூபே கால்வாய் வரை தஹநாயக்க வீதி வழியாக நீரை வெளியேற்ற புதிய வடிகால் அமைப்பை நிர்மாணித்தல் மற்றும் தற்போதுள்ள வடிகால் அமைப்பின் கொள்ளளவை அதிகரித்து அபிவிருத்தி செய்யவும் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹித்தெட்டிய சுற்று வட்டார வீதியிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்பின் கொள்ளளவை அதிகரித்து வடிகால் அமைப்பில் பொறுத்தப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகள், வடிகால் நீர் ஓட்டத்தைத் தடுக்காத வகையில் பொருத்தமான வேறு இடத்தில் பொறுத்தவும் , சுற்றுவட்டார வீதியின் நடுப்பகுதியிலிருந்து ஹந்தயாவத்த பகுதி வழியாக பாதிலியாவத்த சாலை வழியாக நூபே கால்வாய் வரை நீரை வெளியேற்ற தற்போதுள்ள வடிகால் அமைப்பின் கொள்ளளவை அதிகரித்து தடைகளை அகற்றி சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், காணி தொடர்பான இறுதி கிராம சபை வரைபடத்தைப் பெற்ற பிறகு, அந்தக் காணியின் வழியாக இயற்கையான கால்வாய் இருந்ததா? இல்லையா என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.
மேலும், நில்வலா ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள உப்புத் தடுப்பினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கான ஆய்வை நடத்துவதற்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ள செயல்முறையை மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது.