ண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே,
மாண்புமிகு அமைச்சர்களே,
கனவான்களே, கனவாட்டிகளே,
ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நண்பர்களே!
ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே!
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக புதுடெல்லிக்கு வருகைதருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய நாகரீக உறவுகளையும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்த இந்த விஜயம் உதவியது.
ஜனநாயக ரீதியில் நிறுவப்பட்ட தேர்தல் முறைகள் மூலம் இரு நாட்டு மக்களும் தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.இந்தப் பின்னணி மற்றும் நிலையான அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் பௌதீக பாதையின் ஊடாக இருநாடுகளையும் வழிநடத்துவதற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை என்பன இரு நாடுகளின் அரசியல் சூழலின் முக்கிய மைல்கல்லாக உள்ளது. இந்த நிலையிலே எனது இந்த விஜயம் அமைந்துள்ளது.
ஒரே மக்கள் ஆணையின் கீழ் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் தற்போது மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை மக்களால் கிடைத்த இந்த மகத்தான ஆதரவு இலங்கை வரலாற்றில் ஒருபோதுமில்லாத வரலாற்றுத் தருணமாகும். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒருபோதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர்.
எனது மக்களால் இத்தகைய முக்கியமான பொறுப்பை ஒப்படைத்த ஒரு தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் நோக்கம் பல்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் குழுக்களின் சகவாழ்வில் உள்ளது என்பதை நான் தெளிவாக புரிந்துகொள்கிறேன்.
தர்ம போதனைகளைப் பகிர்ந்துகொள்வது முதல் எமது அபிவிருத்தி முன்னேற்றத்தின் ஒரு அங்கமாக இருப்பது வரை இந்தியா எப்போதுமே இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் ஒரு கட்டாய அங்கமாக இருந்து வருகிறது.
எனது இன்றைய இந்தியப் பயணம், நீண்டகாலம் தொட்டு நாம் அனுபவித்து வரும் இந்த நெருங்கிய நட்புறவின் வெளிப்பாடாகும்.
சிறிது நேரத்திற்கு முன்பு, பிரதமர் மோடியும் நானும் எங்கள் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நிறைவு செய்தோம். எங்கள் உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக மீளாய்வு செய்தோம். அத்தோடு எதிர்காலத்தில் அந்நியோன்ய ஆர்வம் செலுத்தும் துறைகளில் எமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம்.
குறிப்பாக 2022ல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட வலுவான ஆதரவிற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நான் நன்றி தெரிவித்தேன்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடத்திற்கு இணங்க, இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இரு நாட்டு பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியும் நானும் அடையாளங் கண்டுள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.
பாதுகாப்பு , மின்சக்தி மற்றும் வலுசக்தி, பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி, கல்வி, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம்.
நிர்வாகம், சேவை வழங்கல் மற்றும் சமூக நலத் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா அடைந்துள்ள வெற்றியைப் பாராட்டுகிறேன். இதேபோன்ற பொதுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி
என்னிடம் உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகள் நமது உறவுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. நபர்களுக்கு இடையிலான வலுவான தொடர்புகளுக்காக இந்த பிணைப்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி நாம் ஆராய்ந்தோம்.
பிராந்திய மற்றும் பலதரப்பு சூழல்களில், உலகளாவிய தெற்கில் ஒரு முன்னணி நாடாக இந்தியாவின் பங்கை நான் பாராட்டினேன். அயோரா அமைப்பின் தலைவர் பதவி இலங்கைக்குக் கிடைப்பதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் லட்சியத்திற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை நான் அவரிடம் கோரினேன்.
விசேட பொருளாதார வலயத்திற்கு அப்பால் கண்ட மட்டத்திலான எல்லைகளுக்கு அப்பால் எல்லைகளை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லை தொடர்பான ஆணைக்குழுவிற்கு இலங்கை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இருதரப்பு தொழில்நுட்ப கலந்துரையாடல்களை மிக விரைவில் கூட்டுவதற்கு பிரதமர் மோடியின் தலையீட்டை நான் கோரினேன்.
அண்மையில் நடைபெற்ற மீன்பிடி தொடர்பான ஆறாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில், மீன்பிடி பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதில் கூட்டு அணுகுமுறையின் அவசியத்தையும் நாங்கள் ஆராய்ந்தோம். இரு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட முறையில் மீன்பிடிப்பதினால் ஏற்படும் சீர்செய்ய முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து, அந்த நடைமுறையை நிறுத்தவும், சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத மீன்பிடித்தலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன்.
பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது ஆகிய துறைகளில் இன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன்.
பரஸ்பர ரீதியில் வசதியான தினமொன்றில் இலங்கைக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதகமான எந்தவொரு வகையிலும் இலங்கை மண்ணை பயன்படுத்த அனுமதிக்காது என இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்தேன்.
எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியாவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்றி
விரிவாக்கத்திற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி