“நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் தரத்தை மேம்படுத்துக”
– ஜனாதிபதி
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுற்றுலா அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
சுற்றுலாத் துறையில் புதிய முன்னெடுப்பாக இந்த ஆண்டு 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்க்கப்படுவதோடு அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது பரவலாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலா பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.