Follow Us:

Saturday, Dec 21
டிசம்பர் 9, 2024

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும்.

  • 2024 மக்கள் ஆணை என்பது மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும்
  • 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 வழக்குகளையும், 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகளையும் வாபஸ் பெற்றதற்கான காரணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
  • இலங்கையின் சட்டம் இது வரை சிலந்தி வலை போன்று செயற்பட்டதால் அதில் சிறிய விலங்குகள் சிக்கின. பெரிய விலங்குகள் தப்பிச் சென்றன.
  • இலங்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும்.
  • சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் “தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.

இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கையை குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின்(UNDP)ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜீ.பி. சபுதந்திரி,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி டபிள்யூ. எம். என்.பி. இத்தவெல, மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Top