Follow Us:

Sunday, Dec 22
டிசம்பர் 20, 2024

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

-ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள ‘நில மெதுர’ கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி

வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார்.

அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘Clean Srilanka’ திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் ‘Clean Srilanka’ ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Top