மனித வரலாற்றின் தீர்மானகரமான திருப்புமுனையில் இருந்துகொண்டு முன்னொருபோதும் இருந்திராத உலகளாவிய ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்ற தருணத்தில் நடாத்தப்படுகின்ற தனித்துவமான மாநாட்டில் உரை நிகழ்த்தக் கிடைத்தமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.
எனது நாடு வியத்தகு வரலாற்றினையும் எதிர்காலம் பற்றிய சுபமான கனவினைக் காண்கின்ற நிகழ்காலத்தையும் அகல் விரிவான அரசியல் மற்றும் சமூக அறிவினாலும் கட்டி வளர்க்கப்பட்ட பிரஜைகளைக் கொண்ட அழகான தீவாகும். உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறுகின்ற சம்பவம் பற்றிய ஒத்துணர்வு எனது நாட்டு மக்களிடம் நிலவுகின்றது.
அவர்கள் மரபுகளை நேசிப்பதைப்போன்றே மாற்றப்படவேண்டிய இடங்களை மிகவும் விவேகமான வகையில் மாற்றிக்கொள்ளும் அளவிற்கு விரிவான சமூக அறிவு நிரம்பியவர்களாவர்.
அதைப்போலவே உங்கள் கையில் இருக்கின்ற கையடக்கத் தொலைபேசியில் இத்தருணத்தில் இணையத்தளத்தை பரிசீலனைசெய்து பார்த்தால் “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது?” இந்தியப் துணைக்கண்டத்தின் ஓரத்தில் அமைந்துள்ள நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற நாட்டையே நீங்கள் காண்பீர்கள். அதுவே இலங்கை.
அத்தகைய பொதுநலம் கருதுகின்ற இரக்கமுள்ள இதயம்படைத்த பிரஜைகள் வசிக்கின்ற நாட்டைப் பிரதிநிதித்தும்செய்து உங்கள் முன் உரையாற்றக் கிடைத்ததையிட்டு எனது நாட்டின் பிரஜைகளின் பெயரால் நான் பெருமிதம் அடைகிறேன்.
மானிட வர்க்கம் பற்றிய முக்கியமான பிரிவுகளில் எதிர்கால உபாய மார்க்கங்களையும் திட்டங்களையும் அபிவிருத்தி செய்தல் மீது கவனஞ் செலுத்தி நடாத்தப்படுகின்ற இந்த மாநாடு எதிர்கால உலகின் நல்வழியுரிமைக்கு உறுதுணையாக அமையுமென நான் நம்புகிறேன்.
நிகழ்காலத்தில் நாங்கள் நாடுகள் என்றவகையிலும் பிராந்திய ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் அளப்பரியவை. அதைப்போலவே சிக்கல் நிறைந்தவையாகும்.
இந்த பிரச்சினைகளை பொருட்படுத்தாத ஒருசிலர் தமது சுயநலப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்கள். எனினும் இன்றைய நாளின் தனிப்பட்ட பிரச்சினைகள் நாளைய தினத்தில் முழு உலகினதும் கதவுகளைத் தட்டுகின்ற பிரச்சினைகளாக மாறும் வேளையில் அவர்களின் சுயநலப் பயணம் முற்றுப்பெறும்.
அதனால் தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டுமென்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.
அதனால் இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டான உலகளாவிய செயல்வழிமுறையும் ஒருங்கிணைந்த முன்னணியொன்றும் அவசியமாகின்றது.
ஆளுகையின் பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் எதிர்கால உலகிற்கு அத்தியாவசியமாகின்றது. அது பிரஜைகளை தனித்தனியாக கூட்டுமுயற்சியொன்று வரை கொண்டுவருவதற்காக பழக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அரச நிறுவனக் கட்டமைப்பும் உத்தியோகத்தர் குழாமும் தமது செயற்பாங்குகள் பற்றி பொறுப்பு வகிப்பதன் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியம் எதிர்கால உலகம் மீது தீர்மானகரமானதாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியானது தரமிக்க தேசமொன்றைப் போன்றே விளைவுவளமிக்க உலகமொன்றுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.
உடன்படிக்கைகளையும் சட்டங்களையும் முறைசார்ந்தவகையில் அமுலாக்குவதும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் உறுதிநிலையற்ற சமுதாயங்களுக்கு முறைப்படி ஒத்துழைப்பினை வழங்குவதும் உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதும் மிகமுக்கியமானதாக அமைகின்றது.
1948 மனித உரிமைகள் நிகழ்ச்சிநிரலில் இருந்திராத டிஜிட்டல் அணுகலுக்கான உரிமைகள் சுற்றாடலுக்கான உரிமைகள் புதிய உரிமைகள் மற்றும் அரசியல் முறைமைகள் தோன்றியமை மனித உரிமைகள் பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட அனைத்துலகப் பிரகடனமொன்றின் அவசியத்தை வேண்டிநிற்கின்றது. அது தொடர்பில் கரிசனை கொண்டு இடையீடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை இத்தருணத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.
நிலைபெறுதகு பெறுமதிகளை அடிப்படையாகக்கொண்ட உலக சமுதாயமொன்றை கட்டியெழுப்புகையில் உலகின் பல்வேறு கலாச்சார மரபுகளின் நன்மதிப்பினைப் பேணிவரவேண்டியதும் முக்கியமானதாக அமைகின்றது.
மிகவும் வறிய நாடுகளில் நூற்றுக்கு 60 வீதத்திற்கு கிட்டியவை கடன் நெருக்கடியில் அல்லது கடன் நெருக்கடியின் உயர்மட்ட அபாயநேர்வில் இருக்கின்ற நிலைமையில் எதிர்காலம் மற்றும் உலகளாவிய பொருளாதாரம் பற்றிய பாரதூரமான பெருமூச்சு விடப்படுகின்றது. உலகளாவிய நிதியளிப்பு நிபந்தனைகள் அதிகரிக்கின்றமை எதிர்காலத்தில் செலுத்தப்படவுள்ள பெருந்தொகையான கடனைச் செலுத்துதல் மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நிகழ்கால சர்வதேச நிதிக்கட்டமைப்பு பலவீனமானவகையில் தயாராகியமையால் உலகளாவிய நோக்கு மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. நவீன உலகிற்கு நியாயமானவகையில் சீராக்கிக்கொள்ளக்கூடிய நிதிசார் திருத்தங்களின்பால் நிலைமாற்றமடைவது மிகவும் முக்கியமான விடயமாக அமைகின்றது.
காலநிலை மாற்றங்கள் உயிர்ப்பன்வகைமை அற்றுப்போதல் மற்றும் கடுமையான ஊழல் போன்ற கட்டுப்பாடற்ற கைத்தொழில் வளர்ச்சியின் படுமோசமான பாதகவிளைவுகளை நோக்கி இந்த கிரகம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அது புவியை நோக்கி பல ஒளியாண்டு வேகத்தில் வருகின்ற கொடூரமான விண்கற்களை விட பயங்கரமானதாகும். பெரும்பாலும் ஒருசில அபிவிருத்தியடைந்த நாடுகள் காபன் டயொக்சயிட் உமிழ்வின் முக்கால்வாசிக்கு பங்களிப்புச் செய்துள்ளபோதிலும் அவை காலநிலை மாற்றங்களின் தாக்கத்திற்கு மிகவும் குறைவாகவே இலக்காகின்றன.
அபிவிருத்தியின் மகுடத்திற்கான தூரம் நீண்டதாக இருந்தபோதிலும் இயற்கை அழகுநிறைந்த குறைந்த வருமானம் பெறுகின்ற பல நாடுகளின் வனப்பு வேறு தரப்பினர்களின் கழிவுப்பொருட்களால் அழிவடைந்து வருகின்றது. அத்தகைய நாடுகளும் தீவுகளும் கொண்டுள்ள அழகான கடற்கரைப் பரப்புகள் அந்த அனர்த்தங்களுக்கு இரையாகி உள்ளன.
வாழ்நாளில் என்றாவது ஒருநாள் நீங்கள் எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு பற்றி நீங்கள் வியப்படைவீர்கள். அதைப் போலவே உங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் பூரிப்படையச் செய்விக்கின்ற விருந்துபசாரத்தை எமது மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள். விருந்தோம்பலை நாங்கள் இயல்பாகவே உங்களுக்கு வெகுமதியாக வழங்கினாலும் எமது நாட்டின் கரையோரப் பரப்பினை அழகாக பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தேசமென்றவகையில் நாங்கள் விடாமுயற்சியுடன் அர்ப்பணிப்புச் செய்துவருகிறோம்.
டிஜிட்டல் புரட்சி ஏற்கெனவே மனிதர் வாழ்கின்றவிதம் வேலை செய்கின்ற விதம் மற்றும் தொடர்பாடலில் ஈடுபடுகின்ற விதம் என்பவற்றை மாற்றியுள்ளது. பில்லியன் கணக்கான மக்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் விளைவாற்றல்மிக்க வாழ்க்கையைக் கழிப்பதற்காகவும் உதவுகின்ற ஆற்றலைக் கொண்டுள்ள அந்த தொழில்நுட்பமே உலகம் முழுவதிலுமுள்ள பிரஜைகளுக்கும் அரசாங்கங்களுக்கும் புதிய சவால்களை உருவாக்குகின்றதென்பதையும் எம்மால் மறந்துவிட முடியாது.
மிகவும் எளிமையாக கணினி வைரஸ் ஒன்று பற்றி சிந்தியுங்கள். அது துப்பாக்கிக் குழாய் மூலமாக சுடுவதோ அல்லது ஆகாய விமானத்திலிருந்து அணுக்குண்டு வீசுவதோ அல்லது ஏவுகணை எறிகின்ற கருவிமூலமாக தாக்குதலை நடாத்துவதோ கிடையாது. எனினும் கடந்த காலத்தில் அணுவாயுத தாக்குதலைப் பார்க்கிலும் பாரிய அச்சுறுத்தல் சைபர் தாக்குதல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஆயுதங்களைக்கொண்ட மரபுரீதியான யுத்தங்களின்போது சிவிலியன்கள் இலக்காகக்கொள்ளப்படுதல் போன்றவற்றுக்கு எதிராக சர்வதேச சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.சைபர் யுத்தங்களுக்கு அத்தகைய சட்டங்கள் அவசியமல்லவா ?
அதேவேளையில் எதிர்வரும் இரண்டு தசாப்தங்களில் சனத்தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல் மற்றும் நுண்ணங்கிகளின் எதிர்ப்பு காரணமாக பல்வேறு சுகாதாரச் சவால்கள் தொடர்ச்சியாக நிலவவும் விரிவடையவும் இடமுண்டு.
மனிதர்கள் என்றவகையில் நாங்கள் தவிர்க்கமுடியாத வகையில் இடைத்தொடர்புகளை பேணி வருகிறோம். ஒருவருடத்திற்கு மேற்பட்ட காலமாக வைரஸ் ஒன்றினால் கிரகமொன்றின் பெரும்பாலான மனிதர்களின் முகங்களை முகக்கவசம் மூலமாக மூடிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது உலகின் பலம்பொருந்திய நாட்டிலிருந்து மிகவும் வறிய நாடு வரை கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது.
2024 இல் தொற்றுநோய்களின் அதிகரிப்பினை அல்லது மீள்வருகையினை காணக்கிடைத்தது. தொற்றா நோய்கள் மத்தியில் புற்றுநோய் உயிர்கள்மீது வழமைக்கு மாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தருணத்திலும் வாழ்வா? சாவா? என அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்ற மில்லியன் கணக்கான புற்றுநோயாளிகள் இருக்கிறார்கள். இதய நோய்கள் தேச எல்லைகளைப் பொருட்படுத்தாமல் உயிர்களை அச்சுறுத்தி வருவதோடு அது பயங்கரமான ஓர் அனர்த்தமாக மாறியுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதிலும் மனநோய்க்கான பொருளாதாரக் கிரயம் 16 ரில்லியன் டொலர்களை விஞ்சியதாக அமையுமென சுகாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.
காலநிலை நெருக்கடி காரணமாக 2050 அளவில் மேலும் 14.5 மில்லியன் இறப்புகள் பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சுகாதாரம், புதிய தொழில்நுட்பம் மற்றும் நவீன சுகாதார உபகரணங்கள், சுற்றாடல் சுகாதாரமும் நிலைபெறுதகுதன்மையும், பொருளாதார அபாயநேர்வுமிக்க நாடுகளுக்கான சுகாதாரரீதியான நிதிசார் ஒத்துழைப்பு பற்றிய அடிப்படைக் கவனம் செலுத்தப்படவேண்டியது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.
கௌரவ விருந்தினர்களே!
நீங்கள் சிலவேளை மத்திய கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யக்கூடும். சிலவேளை அபிரிக்கா சிலவேளை ஆசியா அல்லது சிலவேளை ஐரோப்பா அல்லது மேற்குலகினை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யக்கூடும். எனினும் நாங்கள் அனைவரும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் போன்றே எமது இதயங்களின் “லப் டப்” ஓசையும் ஒன்றாக ஒன்றுசேர்ந்து உலகத்தைக் கட்டியெழுப்புவோம் என்கின்ற மன்றாட்டையே செய்கின்றது.
“நாங்கள் சகோதரர்கள் என்றவகையில் ஒன்றாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.” என மார்ட்டின் லூதர் கிங் கூறியுள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் இடம்பெறப் போவதையும் அவர் கூறியிருக்கிறார்.
நாங்கள் எமது நாட்டு மக்களுக்கு ஒரு நோக்கத்தை சேர்த்தோம். அது “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதை உருவாக்கிட ஒன்றுசேர்வோம் என்பதாகும். வரலாற்றுச் சிறப்புமிக்கவகையில் அவர்கள் அதனை அங்கீகரித்தார்கள்.
“நாங்கள் ஒன்றுசேர்ந்து அழகான வாழ்க்கையை அழகான உலகத்தை உருவாக்கிடுவோம்” என இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மாநாட்டில் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.