Follow Us:

Thursday, Dec 26
நவம்பர் 11, 2024

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம்

  • சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தீர்மானம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடன் சுமையால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

பராட்டே சட்டத்தை (Parate Execution) அமுல்படுத்துவது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வங்கித் துறைக்கு வழங்கக்கூடிய ஆதரவு மற்றும் தற்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெற்றுக்கொண்டுள்ள கடன்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன் தொடர்பான அறிக்கை யொன்றைத் தயாரிக்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது வங்கிகள் பராட்டே சட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரை யாடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் வங்கி கண்காணிப்பு பணிப்பாளர் ஆர். ஆர். எஸ். டி சில்வா ஜயதிலக, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.டி. அமரகோன், வரையறுக்கபட்ட இலங்கை வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திரஜித் போயகொட, யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் ரொட்ரிகோ, சம்பத் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் மனோஜ் அக்மீமன, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் சம்பத் பெரேரா, கொமர்ஷல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் நளின் சமரநாயக்க, ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை மீட்பு மற்றும் புனர்வாழ்வு அதிகாரி நிரோஷ் பெரேரா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமால் தேவரதந்திரி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Top